PAGEVIEWERS



கல்வித் தரத்தில், தொடர்ந்து பல ஆண்டுகளாக, பின்னடைவில் உள்ள வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி உள்ளிட்ட வட மாவட்டங்களைச் சேர்ந்த தேர்வர், டி.இ.டி., தேர்வில், அதிக இடங்களைப் பிடித்து, சாதனை படைத்துள்ளனர்.

கடந்த 25ம் தேதி, ஆசிரியர் தகுதித் தேர்வு (டி.இ.டி.,) முடிவு வெளியிடப்பட்டது. 6.72 லட்சம் பேர் பங்கேற்ற இந்த தேர்வில், வெறும், 2,448 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர். தேர்வு முடிவு குறித்த புள்ளி விவரங்களை, ஆசிரியர் தேர்வு வாரியம், மாவட்ட வாரியாகவும், ஆண், பெண் வாரியாகவும் அலசி ஆராய்ந்து, நேற்று வெளியிட்டது. பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வு முடிவுகளில், எப்போதுமே கடைசி இடங்களில் அணி வகுக்கும், வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட வட மாவட்டங்கள், டி.இ.டி., தேர்வில் அபார சாதனை படைத்துள்ளன. இந்த மாவட்டங்களைச் சேர்ந்த தேர்வரே, அதிக இடங்களைப் பிடித்து, சாதனை படைத்துள்ளனர்.

கல்வியில் சிறந்து விளங்கும், கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, தேனி உள்ளிட்ட தென் மாவட்டங்களைச் சேர்ந்த தேர்வர்களுக்கு, மிகக் குறைந்த இடங்களே கிடைத்துள்ளன.

சேலம், "டாப்':


இடைநிலை ஆசிரியருக்கான, டி.இ.டி., முதல் தாள் தேர்வில், 1,735 பேர் தேர்ச்சி பெற்றனர். இவர்களில் அதிகபட்சமாக, சேலம் மாவட்டத்தில் இருந்து, 121 பேர் தேர்வு பெற்றுள்ளனர். தர்மபுரி மாவட்டத்தில், 116 பேர்; வேலூரில், 99; திருவண்ணாமலையில், 65; விழுப்புரம் மாவட்டத்தில், 77 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.இதுவே, கன்னியாகுமரி மாவட்டத்தில், 26 பேர், நெல்லையில், 62 பேர், தூத்துக்குடியில், 32 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மிகக் குறைவாக, நீலகிரி மாவட்டத்தில், நான்கு பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர். இந்த நான்கு பேருமே பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.மற்ற மாவட்டங்களில், சராசரியாக, 25 பேர் வீதம் தேர்ச்சி 
பெற்றனர். தலைநகர் 
சென்னையில், 69 பேர் தேர்ச்சி
பெற்றுள்ளனர்.
கணிதத்தில் கடலூர்:


பட்டதாரி ஆசிரியருக்கான, டி.இ.டி., இரண்டாம் தாள், கணிதம் - அறிவியல் பாடங்களில், கடலூர் மாவட்டத்தில் இருந்து, 70 பேர் தேர்ச்சி பெற்று, அபார சாதனை படைத்தனர். இதற்கு அடுத்த இடங்களில், விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த, 23 பேர்; தர்மபுரியில், 22 பேர் தேர்ச்சி பெற்றனர். பிளஸ் 2 தேர்வில், முதலிடத்தை பிடிக்கும் விருதுநகர் மாவட்டத்தில், கணிதம் - அறிவியல் பாடத்தில், ஒரே ஒரு பெண் மட்டும் தேர்ச்சி பெற்றுள்ளார். ராமநாதபுரத்தில்இரண்டு பேர், தூத்துக்குடி, திருவாரூர், கிருஷ்ணகிரி, தஞ்சாவூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் இருந்து, தலா மூன்று பேர் தேர்ச்சி பெற்றனர்.
சமூக அறிவியலில்...:


டி.இ.டி., இரண்டாம் தாளில், சமூக அறிவியல் பாடத்தில், சேலம் மாவட்டமே முதலிடம் பிடித்தது. இந்த மாவட்டத்தில், 39 பேர் தேர்ச்சி பெற்றனர். 29 இடங்களைப் பிடித்து, கடலூர், தர்மபுரி மாவட்டங்கள், இரண்டாவது இடத்திலும்; 24 இடங்களைப் பிடித்து, விழுப்புரம் மூன்றாவது இடத்திலும் உள்ளன. இந்தப் பாடத்திலும், தென் மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள், அதிக இடங்களைப் பிடிக்கவில்லை. கன்னியாகுமரி, நெல்லை மாவட்டங்களில், தலா, 11 பேர், தூத்துக்குடி மாவட்டத்தில், ஏழு பேர், விருது நகரில், 12 பேர், கோவையில் ஐந்து பேர் தேர்ச்சி பெற்றனர்.கடினமாக அமைந்த, டி.இ.டி., தேர்வில், வட மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள், அதிக இடங்களைப் பிடித்து சாதனை படைத்திருப்பதைக் கண்டு, கல்வித்துறை அதிகாரிகள் வியப்பில் ஆழ்ந்துள்ளனர்.
"முட்டை' வாங்கிய சிவகங்கை :


டி.இ.டி., இரண்டாம் தாள், கணிதம் - அறிவியல் பாடத்தில், மத்திய நிதி அமைச்சர் சிதம்பரத்தின் சொந்த மாவட்டமான சிவகங்கையில் இருந்து, ஒருவர் கூட தேர்ச்சி பெறவில்லை. இதேபோல், நீலகிரி மாவட்டத்தில் இருந்தும், ஒருவர் கூட 
தேர்வு பெறவில்லை. இந்தப் பாடத்தில், புதுக்கோட்டை, விருதுநகர், ஆகிய மாவட்டங்களில் இருந்து, தலா ஒருவர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.இரண்டாம் தாள் தேர்வில், சமூக அறிவியல் பாடத்திலும்,நீலகிரி மாவட்டத்தில், ஒருவர் கூட தேர்வு பெறவில்லை. சிவகங்கை மாவட்டத்தில், இருவர் தேர்ச்சி பெற்றனர்.

இளைஞர்கள் அபார சாதனை:


டி.இ.டி., தேர்வில், 25 வயது முதல், 30 வரையிலான இளைஞர்கள், 77.81 சதவீத இடங்களை கைப்பற்றி, சாதனை படைத்தனர். தேர்ச்சி பெற்ற, 2,448 பேரில், 30 வயதிற்கு உட்பட்டோரின் எண்ணிக்கை, 1,905.இதில், 25 வயது முதல், 30 வயது வரையிலான இளைஞர்கள், படித்து முடித்து வெளியே வந்த வேகத்தில், தேர்வை சிறப்பாக எதிர்கொண்டு, சாதித்திருப்பது தெரிய வந்துள்ளது. தேர்வு எழுதிய, 40 முதல், 45 வரையிலான, 5,653 பேரில், 20 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர்.முந்தைய ஆட்சியில், அனைத்து வகை ஆசிரியருமே, மாநில பதிவுமூப்பு அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டனர். இதனால், 50 வயதிற்கு மேற்பட்டவர் அதிகளவில் தேர்வு பெற்றனர். வயதான நிலையில் தேர்வு பெறும் ஆசிரியருக்கு, பணியில் ஈடுபாடோ, கல்வித்துறை அளிக்கும் பயிற்சிகளில், பிடிப்புடன் ஈடுபடவோ மாட்டார்கள் என்பது, பலரது கருத்து.

No comments:

Post a Comment