கள்ளக்குறிச்சி: சுகாதாரம் இல்லாத அரசு மற்றும் தனியார் பள்ளிகள் மீது
கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் சம்பத் எச்சரித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி கோட்டத்திற்குட்பட்ட அரசு மற்றும் தனியார் பள்ளிகளில்
மாணவர்களின் சுகாதார நிலையை மேம்படுத்துவதற்கான
விழிப்புணர்வு கூட்டம்
நடந்தது. கள்ளக்குறிச்சி கண்ணன் மகாலில் நடந்த கூட்டத்திற்கு கலெக்டர்
சம்பத் தலைமை தாங்கி பேசினார். சப்-கலெக்டர் விவேகானந்தன், மருத்துவமனை இணை
இயக்குனர் உதயகுமார், கண்காணிப்பாளர் நேரு முன்னிலை வகித்தனர்.
சுகாதார துறை துணை இயக்குனர் கோவிந்தன் வரவேற்றார். கூட்டத்தில் முதன்மை
கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் சண்முகம், மாவட்ட விரிவாக்க கல்வியாளர்
தனசேகரன், தாசில்தார் மூர்த்தி உட்பட தனியார் பள்ளி தாளாளர்கள், அரசு
பள்ளி தலைமையாசிரியர்கள், பேரூராட்சி செயல்அலுவலர்கள், பி.டி.ஓ.,க்கள்
மற்றும் சுகாதார துறை அலுவலர்கள் பலர் பங்கேற்றனர்.
கூட்டத்தில் கலெக்டர் சம்பத் கூறியதாவது: பள்ளிகளில் சுகாதார
சீர்கேடினால் மாணவர்கள் பாதிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. இதுபோன்ற
சம்பவம் இனி நடக்காமல் இருப்பதற்கு அரசு மற்றும் தனியார் பள்ளிகளில்
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது. பாதிக்கப்பட்ட
மாணவர்களின் ஒவ்வொரு வீட்டிற்கும் மருத்துவ குழுவினர் நியமிக்கப்பட்டு,
தொடர்ந்து சிகிச்சைகள் அளிக்கப்படும்.
பள்ளிகளின் சுகாதாரம் குறித்து தீவிரமாக கண்காணிக்கப்படும். தடுப்பு
நடவடிக்கையாக அனைத்து தனியார் பள்ளிகளிலும் சுத்தகரிக்கப்பட்ட குடிநீர்
(மினரல் வாட்டர்) வழங்குவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும். வருவாய் துறை,
சுகாதார துறை, கல்வி துறை, உள்ளாட்சி துறை ஆகிய நான்கு அரசு துறை
அதிகாரிகள் மூலம் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் அடிக்கடி ஆய்வு
செய்யப்படும். சுகாதாரமற்ற முறையில் உள்ள பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை
எடுக்கப்படும். இவ்வாறு கலெக்டர் சம்பத் கூறினார்.
No comments:
Post a Comment